தலச்சிறப்பு |
கருமையான நிறமுள்ள 'பூளை' என்னும் செடிகள் நிறைந்த வனமாக இருந்ததால் இப்பகுதி 'இரும்பூளை' என்று வழங்கப்பட்டது. பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகால விஷத்தைக் குடித்து, சிவபெருமான் தேவர்களைக் காத்ததால் இத்தலம் 'ஆலங்குடி' என்று அழைக்கப்பட்டதாகக் கூறுவர்.
மூலவர் 'ஆபத்சகாயேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், சிறிய லிங்க மூர்த்தியாகக் காட்சி அளிக்கின்றார். இவர் 'காசி ஆரண்யேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகின்றார். அம்பாள் 'ஏலவார்குழலி' என்னும் திருநாமத்துடன் அருள்புரிகின்றாள். அம்பாள் இத்தலத்தில் தவமிருந்து இறைவனைத் திருமணம் செய்துக் கொண்டதாகத் தலபுராணம் கூறுகிறது.
கோஷ்டத்தில் விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் கலங்காமல் காத்த விநாயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், மகாலட்சுமி, சமயக் குரவர்கள் நால்வர், காசி விஸ்வநாதர், அகத்தியர், சனி பகவான், சப்த மாதர்கள் மற்றும் நடராஜர் சன்னதிகள் உள்ளன.
நவக்கிரக பரிகாரக் கோயில்களுள் இத்தலம் குரு தலமாகும். கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியே இங்கு குரு பகவானாகக் காட்சியளிக்கின்றார். ஆலகால விஷம் வெளிப்பட்ட வேகத்தில் பயந்த தேவர்களுக்கு ஞானோபதேசம் செய்த மூர்த்தி. இவருக்கு உற்சவங்களும் நடைபெறுகின்றன. குருபெயர்ச்சி விசேஷம்.
காவிரிக் கரையில் உள்ள பஞ்ச ஆரண்யத் (ஆரண்யம் - வனம்) தலங்களுள் இத்தலமும் ஒன்று. கருகாவூர் - முல்லை வனம், அவளிவநல்லூர் - பாதிரி வனம், அருதைப் பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) - வன்னி வனம், இரும்பூளை (ஆலங்குடி) - பூளை வனம், கொள்ளம்புதூர் - வில்வ வனம். இந்த ஐந்து தலங்களையும் முறையே வைகறை, காலை, நண்பகல், மாலை, அர்த்தசாமம் ஆகிய காலங்களில் வழிபடுவது சிறப்பு. இவை இன்றும் வழக்கத்தில் உள்ளன.
திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமானுக்குரிய பரிவார மூர்த்தியாக இத்தலம் தட்சிணாமூர்த்தி சன்னதியாகவும், திருவலஞ்சுழி விநாயகர் சன்னதியாகவும், சுவாமிமலை சுப்பிரமண்யர் சன்னதியாகவும், திருவாரூர் சோமாஸ்கந்தர் சன்னதியாகவும், திருவாவடுதுறை நந்தி தேவர் சன்னதியாகவும், திருச்சேய்ஞலூர் சண்டிகேஸ்வரர் சன்னதியாகவும், சூரியனார் கோயில் நவக்கிரகங்கள் சன்னதியாகவும், சீர்காழி பைரவர் சன்னதியாகவும் வழங்கப்படுகிறது.
வீரபத்திரர், விஸ்வாமித்திரர், முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|